சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சென்னை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்ட திருப்பதி குடை ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  
திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ விழா நடைபெறும் சமயத்தில் தமிழக பக்தர்கள் சார்பில் ஆண்டுதோறும் குடைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அளிக்கப்படுகின்றன.  

இந்த ஆண்டு ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில்  திங்கள்கிழமை காலை 10 மணியளவில் சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து விசேஷ பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் புறப்பட்டது.

திருக்குடை ஊர்வலத்தை உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேச தீர்த்த சுவாமிகள் தொடங்கி வைத்தார். விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ஆளவந்தார், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி, விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில செயல் தலைவர் நாராயணசாமி, ஹிந்து தர்மார்த்த சமிதி நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

திருப்பதி குடைகள் ஊர்வலம் என்எஸ்சி போஸ் ரோடு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு வழியாக பைராகி மடம் சென்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு பைராகி மடத்தில் இருந்து புறப்பட்டு வால்டாக்ஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் ஆலயம் சென்றடைந்தது.

செவ்வாய்க்கிழமை காலை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஐசிஎப், அகரம், திருவிக நகர், பெரம்பூர் வழியாக வில்லிவாக்கத்தில் உள்ள செளமிய தாமோதர பெருமாள் கோயிலை சென்றடைகின்றன.

புதன்கிழமை காலை பாடி, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் வழியாக இரவு ஆவடி காமராஜர் நகர் வெங்கடேசப் பெருமாள் கோயிலை சென்றடைகின்றன.

வியாழக்கிழமை காலை பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு வழியாக இரவு 7 மணிக்கு திருவள்ளூரை சென்றடைகின்றன.

வெள்ளிக்கிழமை திருவள்ளூரில் இருந்து திருப்பாச்சூர், குப்பம்மாள் சத்திரம் வழியாக காலை 10 மணியளவில் திருப்பதி திருமலை சென்றடைகின்றன.

சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி குடை ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வழிநெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருப்பதி குடை ஊர்வலத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
https://goo.gl/HZowkT


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு