காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில். அழகிய சிற்ப வேலைப்பாடுகள், சுவர் ஓவியங்கள், பழமையான கல்வெட்டுகள் போன்றவற்றை இந்த கோவில் கொண்டுள்ளது. இந்த கோவில் 2 ராஜகோபுரங்கள், பல சிறிய கோபுரங்கள் மற்றும் 5 பிரகாரங்களை கொண்டது. முதலாம் ராஜராஜசோழனால் கி.பி.1018-1054-ம் ஆண்டில் இந்த கோவில் கட்டப்பட்டது.

காயத்திரி மந்திரத்தின் தத்துவத்தை விளக்கும் வகையில் 24 படிகள் கொண்ட அஸ்தகிரி என அழைக்கப்படும் திருமலையில் நின்ற கோலத்தில் மூலவர் காட்சி தருகிறார். மேலும் கோவில் அமைந்துள்ள நிலப்பரப்பு 24 ஏக்கர். கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தின் படிகட்டுகள் 24. கொடி மரத்தில் உள்ள அடுக்குகள் 24. மதில் சுவரில் உள்ள கற்களின் அடுக்குகள் 24 ஆகும்.

இப்படி பல வரலாற்று சிறப்புகளையும், புகழையும் பெற்ற இந்த கோவிலில் முழுமையாக கும்பாபிஷேகம் நடந்து 250 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று கூறப்படுகிறது.

வரதராஜ பெருமாள் கோவிலில் முழுமையாக திருப்பணி செய்ய கடந்த 2007-ம் ஆண்டு முடிவு எடுக்கப்பட்டது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிக்காக ரூ.1 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதியை வைத்தும் நன்கொடையாளர்களிடம் இருந்து பெற்ற பல கோடி ரூபாய் நிதியை வைத்தும் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. 8 மணிக்கு பெருமாள், தாயார் யாகசாலைக்கு எழுந்தருளினர். அங்கு துவார கும்ப மண்டல திருவாராதனம் நிவேதனம், பெருமாள் திவாராதனம், ஹோமங்கள் நடந்தன. 101/2 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணியிலிருந்து 12 மணிக்குள்ளாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

மேற்கு ராஜ கோபுரம், கிழக்கு ராஜ கோபுரம், தாயார் தங்க விமானம், புண்ணியக்கோட்டி விமானம், 100 கால் மண்டபம், மூலவர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தொண்டரடி பொடியாழ்வார் பிரகாரம், பல சிறிய சன்னதிகள், பிரகாரங்கள், விமானங்கள் மீது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ஊற்றி அர்ச்சகர்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.

கும்பாபிஷேகம் முடிந்ததும் பெருமாள் தாயாருடன் கண்ணாடி அறையில் எழுந்தருளினார். மாலையில், கோவில் மாட வீதிகளில் திருவீதிஉலா வந்தார். இதனைத்தொடர்ந்து இரவு பெருமாள் திருமலைக்கும், தாயார் சன்னதிக்கும் எழுந்தருளினர்.

கும்பாபிஷேகத்திற்கான அனைத்து செலவுகளையும் ஸ்ரீஅஹோபில மடம் 45-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீநாராயண யதீந்திர மகா தேசிகன், 46-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிகன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா, எம்.எல்.ஏ.க்கள் வி.சோமசுந்தரம், வாலாஜாபாத்.பா.கணேசன், மத்திய எக்கு வாரிய உறுப்பினர் ஆர்.வி.ரஞ்சித்குமார், ஸ்ரீஅஹோபில மடம் 45-வது பட்ட ஜீயரின் பேரன்கள் சேஷாத்திரி, சம்பத், வரதராஜன், வக்கீல்கள் வாசுதேவன், ரேவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

https://goo.gl/mRx6k5


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு