இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

இன்று திருச்செந்தூர் முருகன்  கோயிலில் சூரசம்ஹாரம் விழா  குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. கடந்த 24-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது.

தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை, மூலவருக்கு உச்சிகால பூஜை, ஜெயந்திநாதருக்கு யாக சாலையில் தீபாராதனை, தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருதல், திருவாவடுதுறை சஷ்டி மண்ட பத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், தங்க ரதத்தில் கிரி வீதி உலா போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


சூரசம்ஹார விழா நடைபெறும் இன்று அதிகாலை 1 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.

காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, பகல் 12 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜையும் அதைத் தொடர்ந்து ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனையும் நடைபெறவுள்ளன.

பகல் 12.45 மணிக்கு தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேள வாத்தியங்களுடன் சண்முக விலாசம் சேருகிறார். அங்கு தீபாராதனை நடைபெறவுள்ளது.


பிற்பகல் 2 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற் கரையில் எழுந்தருள உள்ளார்.

அங்கு பல்வேறு ரூபங்களோடு போரிட வரும் சூரபத்மனை வதம் செய்வார். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சந்தோச மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாரதனை நடைபெறும். தொடர்ந்து கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேருகிறார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன் சாயா அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்படும்.


கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 6 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச் செந்தூரிலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர். இவ் விழாவுக்காக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும்போது கடற்கரையில் 8 லட்சம் பக்தர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில் கம்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டத்தை காவல் துறையினர் கண்காணிக்க கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மா.துரை தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

விழா ஏற்பாடுகளை தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) ரா.ஞானசேகர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றன

https://goo.gl/kqdS9V


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு