இன்று ஆடி அமாவாசை

இன்று ஆடி அமாவாசை
சூரியனின் பயணத்தை வைத்து `உத்தராயணம்', `தட்சணாயனம்' என ஒரு ஆண்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. `அயனம்' என்றால் பயணம் என்று பொருளாகும். சூரியன் மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிஷபம் ஆகிய ஆறு ராசிகளில் பயணம் செய்யும் காலமாகிய தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்கள் ``உத்தராயணம்'' என அழைக்கப்படுகிறது.

சூரியன் கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ஆறு ராசிகளில் பயணம் செய்யும் காலமான ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, ஆகிய ஆறு மாதங்கள் ``தட்சணாயனம்'' என்று அழைக்கப்படுகிறது.

சூரியன் உதயமாகி சற்று வடக்கு திசை நோக்கி பயணம் செய்வது `உத்தராயணம்' ஆகும். சற்று தெற்கு நோக்கி பயணம் செய்வது `தட்சணாயனம்' ஆகும். அதாவது உத்தராயணத்தில் சூரியன் தென்கிழக்கில் உதயமாகி வடமேற்கில் மறைவது போன்றும், தட்சணாயனத்தில் வடகிழக்கில் உதயமாகி தென்மேற்கில் மறைவது போன்றும் தோற்றமளிக்கும்.

உத்தராயண காலம் தேவர்களுக்கு பகல் பொழுது என்றும், தட்சணாயனம் காலம் தேவர்களுக்கு இரவுக்காலம் என்றும் கூறப்படுகிறது. எனவே உத்தராயண காலம் எல்லாவிதமான சுபசெயல்களுக்கும் ஏற்றதாகும்.

உத்தராயண காலத்தின் தொடக்கமான தைமாத அமாவாசையும், தட்சணாயன காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இறந்த பெற்றோர்கள் மற்றும் நம்முடைய முன்னோர்களை (பித்ருக்களை) இந்த அமாவாசையில் வணங்குவதன் மூலம் நலம் பெறுவதாக நம்பிக்கை.

பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போது பேணிப் பாதுகாக்க வேண்டும். இறந்த திதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் அவர்களுக்கு திதி தரவேண்டும். இறந்த தேதியைப் பார்த்து திதி அளிக்க மறந்தவர்கள் ஆடி, தை மாத அமாவாசை நாட்களில் நதிகள், கடற்கரையோரங்களில் புரோகிதர் மூலமாக திதி கொடுக்கலாம்.

கருடபுராணத்தில் மகனைப் பெறாதவனுக்கு எந்த உலகத்திலும் இன்பம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இவ்வுலகத்திலும், மேல் உலகத்திலும் இன்பத்தை பெற நினைப்பவன் முன்னோர்களுக்கு திதியும், தர்மமும் செய்திருக்க வேண்டும். செய்ய தவறினால் அவனது மனைவியின் வயிற்றில் கர்ப்பம் தரிக்காது. அப்படியே தரித்தாலும் அது பத்து மாதம் நிரம்புவதற்கு முன்னாலேயே கரைந்து போய்விடும். நல்லமகனை பெற்றவனே அனைத்து உலகங்களிலும் நன்மையை அடையலாம் என்று இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இறந்தவர்களுக்கு ஆடி அமாவாசையில் திதி கொடுப்பதால் அவர்களுக்கு மேல் உலகிலும் நன்மை கிடைக்கும். நீத்தார் கடன்களை செய்யாமல் விட்டு விடக்கூடாது. ஒவ்வொருவரும் பெற்றோர்களை பேணுதல் முக்கிய கடமை போன்று திதி செய்வதும் கடமையே ஆகும். மறைந்த நம் முன்னோர்களின் ஆசியையும் பெறலாம். அதனால் மிகுந்த நன்மையுண்டாகும்.

ஆடி அமாவாசையான இன்று புரோகிதருக்கு தேங்காய், பழம், அரிசி, காய்கறிகள், வேட்டி, துண்டு போன்றவற்றை அளிக்க வேண்டும். அத்துடன் ஏழைகளுக்கு அன்னதானமும், உதவியும் வழங்கலாம். அவர்கள் நினைவாக பல நற்செயல்களை செய்யலாம்.

https://goo.gl/rpSFgw


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு