tamilkurinji logo


 

நாமக்கல்லில் ஒரு நம்பிக்கையின் இல்லம்...........!,




நாமக்கல்லில் ஒரு நம்பிக்கையின் இல்லம்...........!

First Published : Monday , 1st February 2010 10:12:28 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

நாமக்கல்லில் ஒரு நம்பிக்கையின் இல்லம்...........!,

24.11.03 காலை பத்துமணி....கலெக்டர் அலுவலகம்.....பொதுமக்களும், அலுவலர்களுமாக பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது... அவரவர் பணிகளில் ஆழ்ந்திருந்த நேரம்..... அம்மா...!....ஐயோ......! அம்மா...! என ஒரு கூக்குரல் கலெக்டர் அலுவலகத்தையே உலுக்குகிறது.. அனைவரும்  அலுவலகத்தின் முன் பகுதிக்கு ஓடுகிறார்கள்... வாசலில் ஒரு பெண்....... தீயில் எரிந்து கொண்டிருக்கிறார்... அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்.. துடித்துக் கொண்டு கீழே விழுகிறார் ....கொஞ்சம்... கொஞ்சமாக அவரது ஆன்மா அடங்குகிறது.... நீதி செத்ததால் மதுரையையே எரித்த கண்ணகி போல நீதிக்காக தன் உயிரையே மாய்த்து கொண்டது ஒரு ஜீவன்.....
 
இது ஏதோ ஒரு சுவாரசியமான நாவலின் பகுதி அல்ல... நடந்த உண்மை....
 
சுந்தரமூர்த்தி-பிரேமா கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர்.... தங்களுக்குள் வளர்த்த காதலால் இருவருமே போராட்டத்தையே வாழ்க்கையாக்கி கொண்டிருந்தனர். தங்களது கலப்பு திருமணத்தால் எழுந்த எதிர்ப்பு காரணமாக இருவரும் சொந்தங்களை, பந்தங்களை உதறிவிட்டு கண்காணாத தேசமாக காஞ்சிபுரம் வந்தனர். வாழ வழி கிடைக்க கீழம்பி கிராமத்தையே தங்களது பூர்வீகமாக்கிக் கொண்டனர். காதல் பரிசாக 25.3.2000 த்தில் ஆண் மகவை பெற்றனர்.
 
சுந்தரமூர்த்தியும் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அதே கிராமத்தில் கொஞ்சம் நிலங்களை வாங்கி வீடும் கட்டினார்.. இந்நிலையில் 21.08.2001 ல் அழகான பெண் மகவை பெற்றனர். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என தங்களது இன்பமயமான வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அவர்களின் அன்பான உள்ளத்தால் ஊரில் சிலரும் நண்பரானார்கள். இந்நிலையில் சுந்தரமூர்த்தியின் வீடு இருந்த பகுதியில் மரங்கள் அடர்ந்த தோட்டப்பகுதி இருந்தது. இந்த மறைவான பகுதி நாளடைவில் சமூகவீரோதிகளின் கூடாரமானது. இதனால் அருகில் இருந்த சுந்தரமூர்த்தியின் குடும்பத்திற்கு பல்வேறு வகைகளில் இடையூறு வந்தது. அந்த கூற்றுவன்களிடம் சுந்தரமூர்த்தி அன்பாய் சொல்லிப் பார்த்தார்.... கேட்கவில்லை... இதனை சகித்து கொண்டு வாழ்க்கையை ஓட்டிய சுந்தரமூர்த்தியின் குடும்பத்திற்கு மேலும் சிக்கல்கள் தொடங்கின....பிரேமாவின் கையைப் பிடித்து இழுக்கும் அளவிற்கு போனது.... வன்முறை.
 
கிளர்ந்து எழுந்தார் பிரேமா. உள்ளூர் காவல் நிலையம் சென்றார்... நியாயம் கிடைக்க வில்லை.... டிஎஸ்பியிடம் சென்றார் நியாயம் கிடைக்கவில்லை.. எஸ்பியிடம் முறையிட்டார்...ம்ம்ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹ்ம்..... ஒன்றுமே நடக்கவில்லை.....இறுதியில் கிடைத்தது. பிரேமாவிற்கு வேசிப் பட்டம்......நொந்து போனார்...மனம் வெதும்பிய அவர் தனது கணவனிடம் கூட கூறாமல் கலெக்டர் அலுவலகம் சென்றார்..... தனது மனக்குமுறல்களை தனக்கு நேர்ந்த அநீதியை விரிவாக ..எழுதி வைத்து விட்டு  தனது கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் நடத்தினாள் இந்த சீதை... ஆனால் காக்கத்தான் எந்த கடவுளும் வரவில்லை...
 
பிரேமாவின் மறைவிற்கு பிறகு மனதொடிந்த சுந்தரமூர்த்தி தனது இரு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு தனது சொத்துக்களை விட்டு விட்டு...... தனது நண்பர்களைத் தேடி கிளம்பினார். நண்பர் பொன்னுசாமி ஆதரவு கரம் நீட்டினார்.. பற்றிக் கொண்ட சுந்தரமூர்த்தி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பக்கம் உள்ள காளப்பநாயக்கன்பட்டியில் குடியேறி தனது குழந்தைகளுக்காக வாழத் தொடங்கினார். தன்னிடம் இருந்த பாடல் திறமையால் தனது வாழ்க்கையை நகர்த்தினார்.
 
கடுமையான உழைப்பும், பிரேமாவின் இழப்பும் சுந்தரமூர்த்தியை வெகுவாகப் பாதிக்க... கடந்த 15.12.2008 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரும் மரணமடைந்தார்.
 
இதற்கிடையே பிரேமாவின் சாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனித உரிமைகள் அமைப்பு நண்பர்கள் பலர் போராடிக் கொண்டிருந்தனர்.இந்த போராட்டத்தின் பலனாக பிரேமாவின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.ஒரு லட்சத்தினை அரசு அறிவித்தது. இந்த நிவாரணத் தொகையை வழங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பிரேமாவின் குடும்பத்தை தேடியது....

அந்த குடும்பம் நாமக்கல் மாவட்டத்தில் இருப்பதை அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியது. இந்த கடிதத்தை படித்த கலெக்டர் சகாயம் உடனடியாக அந்தக் குடும்பத்தை வரவழைத்தார். சுந்தரமூர்த்தியின் நண்பரான பொன்னுசாமி அநாதையாகிவிட்ட அந்த இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்.அவர்களின் கதையைக் கேட்ட கலெக்டர் சகாயம், தான் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.வோவாக இருந்தபோது கேள்விப்பட்ட சம்பவம் தான் இது என்பதை உறுதிபடுத்திக் கொண்டார். அந்த சம்பவத்தை  அறிந்ததன் பாதிப்பு இன்றும் அவரது மனதில் இருந்ததால் தாய் தந்தை இல்லாத சூழலில் அவர்களை பெற்றோர் இல்லை என்ற குறை தெரியாமல் வளர என்ன செய்வது என்று சிந்தித்தார்.

 

நிவாரணத் தொகை ஒரு லட்சத்தை குழந்தைகள் நந்தா(எ)நாராயணதாசன்,  பாரதி(எ) சத்ய சூரிய பாரதிக்கு கிடைக்க ஏற்பாடு செய்ததுடன் அந்த தொகையை அவர்களின் பேரில் வருங்கால வைப்பு நிதியாகவும் டெப்பாஸிட் செய்ய ஏற்பாடு செய்தார். மேலும் பொன்னுசாமியிடம் அந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கவும் அறிவுறுத்தினார்.
 
இந்நிலையில் கீழம்பி கிராமத்திலிருந்து சுந்தரமூர்த்தியின் நண்பர்கள் என கூறிக் கொண்டு சிலர் அந்த குழந்தைகளை தாங்கள் வளர்ப்பதாக கூறி கலெக்டரை சந்தித்தினர். அவர்களிடம் பேசிய கலெக்டர் சகாயம், வந்தவர்களின் மனதில் உண்மை இல்லை என்பதை அறிந்து குழந்தைகளை அனுப்ப மறுத்ததுடன். கீழம்பியில் உள்ள சுந்தரமூர்த்தியின் சொத்துக்களை பாதுகாக்கவும் ஏற்பாடு செய்தார்.
 
பொன்னுசாமியின் அரவணைப்பில் குழந்தைகள் வளர்ந்து வந்த நிலையில் பொன்னுசாமியும் வயோதிகம் காரணமாக இயற்கை எய்தினார். ஈகைக் குணம் இருந்தும் வறுமை காரணமாக  பொன்னுசாமியின் மகனால் குழந்தைகளைப் பராமரிக்க இயலவில்லை. கலெக்டர் சகாயத்தினை நேரில் சந்தித்த அவர் தனது நிலைமையை கூற... கலெக்டர் அந்த குழந்தைகளைப் பராமரிக்கும்படி ஒரு காப்பகத்துக்கு அனுப்பினார்.
 
திடீரென்று வேறு அலுவலாகச் சென்ற கலெக்டர் சகாயம்,குழந்தைகளை விட்டிருந்த காப்பகத்துக்கு முன்னறிவிப்பின்றிச் சென்றபோது குழந்தைகள் அங்கு இல்லாததைக் கண்டு திடுக்கிட்டார். குழந்தைகளைத் தேடிப்பிடித்து விசாரித்ததில்,காப்பகத்துச் சூழல் பிடிக்காமல் ஓடிப்போனதாக தெரிவித்திருக்கின்றனர்.
 
அப்போது அவர் மனதில் ஒரு புதிய எண்ணம் தோன்றியது.. இதனை தனது சக அலுவலர்களிடம் கூற உடனடியாக ஒரு குழந்தைகள் காப்பகம் உருவானது.  அதற்கு கலெக்டர் சகாயம்,  "நம்பிக்கை இல்லம்" என்ற பெயரும் சூட்டினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பொரசபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான  வாடகை வீட்டில் இந்த இல்லம் தொடங்கப்பட்டது அந்த இரு குழந்தைகளையும் இந்த இல்லத்தில் பராமரிக்க ஏற்பாடு செய்தார். மேலும் தான் அரசு அலுவலர் என்ற காரணத்தாலும் தான் வேறு ஊருக்கு  மாற்றப்படலாம் என்பதாலும் தன்னால் நேரடியாக இந்த இல்லத்தை கண்காணிக்க முடியாது என்பதாலும் ஒரு டிரஸ்ட் உருவாக்க ஏற்பாடு செய்ததுடன் இதற்காக நேர்மையாகவும், தொண்டு புரியும் மனப்பான்மையுமுள்ள‌ நாமக்கல்லை சேர்ந்த மனோகரன் கந்தசாமியிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார். மனோகரன் கந்தசாமி மற்றும் வழக்கறிஞர் காயத்திரி தேவி என்பவரையும் நிர்வாக அறங்காவலர்களாகக் கொண்ட‌ நம்பிக்கை இல்லத்தினை கடந்த 5.12.2009 அன்று முறைப்படி பதிவு செய்யப்பட்டது( பதிவு எண்.1270/2009). அந்த நம்பிக்கை இல்லத்தில் குழந்தைகளைக் கவனிக்க தாயுள்ளத்தோடு ஒருவரை நியமிக்க ஆவன செய்தார். தன் சொந்தப்பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை முதல் நிதியாக கலெக்டர் சகாயம் மனோகரன் கந்தசாமியிடம் வழங்கினார்.
 
நம்பிக்கை இல்லம்.....
 
கலெக்டர் சகாயம் மக்கள் குறை கேட்க கிராமம் தோறும் செல்வது வழக்கம் அவ்வாறு கொல்லிமலை, சேளூர் நாடு கிராமத்திற்கு சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குட்டியாண்டி சின்னையன் என்பவர் தனது வறுமை காரணமாக தனது ஊனமுற்ற மகனை படிக்க வைக்க இயலவில்லை என கண்ணீர்விட்டார்.

அவரது பிரச்சனையை முழுமையாக கேட்டறிந்த கலெக்டர் உடனடியாக அவரது மகன் மணிகண்டனை  நம்பிக்கை இல்லத்தில் சேர்த்தார்.

 
இதேபோல் பரமத்தி வேலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட ஊஞ்சல்பாளையம் கிராமத்திற்கு சென்ற போது கணவனை இழந்த சிங்காரி என்ற பெண் வறுமை காரணமாக தனது இரண்டு பெண்குழந்தைகளையும் வைத்து பராமரிக்க இயலவில்லை எனக் கூற அவரது ஒரு பெண் குழந்தையான வினோதினியை
 நம்பிக்கை இல்லத்தில் சேர்த்தார். இதேபோல் தாய் தந்தையரை இழந்த பவானிஎன்ற கல்லூரி மாணவியும், நாமகிரிப்பேட்டை பகுதியில் வீதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மனநிலை சற்றே பாதிப்படைந்த அருண்குமார் என்ற சிறுவனும் நம்பிக்கை இல்லம் வந்தனர். இன்று நம்பிக்கை இல்லத்தில் 6 குழந்தைகள் உள்ளனர். இவர்களைப் பராமரிக்க கணவனை இழந்த விதவையான செல்வி (எ) செல்லம்மாள்(52) நியமிக்கப்பட்டுள்ளார்.கல்லூரி நேரம் போக இவருக்கு உறுதுணையாக பவானியும் குழந்தைகளை பராமரித்து வருகிறார்.

 
நம்பிக்கை இல்லம் குறித்து அதன் டிரஸ்டி மனோகர் கந்தசாமி கூறியதாவது:-
 
நாமக்கல் மாவட்டம் மோட்டார் வாகனத் தொழிலில் இந்திய அளவில் புகழ்பெற்றது. இந்த தொழிலைச் சார்ந்தே மாவட்ட மக்கள் தங்களது வாழ்வை அமைத்து கொண்டுள்ளனர். இந்த தொழிலைச் சார்ந்துள்ள 25-35 வயதுள்ள 35 சதவீத இளைஞர்கள் ஹெஜ்.ஐ.வி, விபத்து ஆகியவற்றால் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்த மாவட்டத்தில் விதவைகள் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகம்.
 
இது போன்ற சூழல் உள்ள இந்த மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த மாவட்டத்திற்கு வந்தேன்.இதற்கு முன்னர் அமெரிக்காவின், சான்பிரான்சிஸ்கோ நகரில் பணிபுரிந்தேன் அதன் பிறகு சுனாமி தாக்குதல் ஏற்பட்ட சமயம், சென்னை காசிமேடு உட்பட்ட பகுதிகளில் பாதிப்படைந்த மீனவ இளைஞர்களுக்கு கணினி பராமரிப்பு பயிற்சி வழங்கி அவர்களது வாழ்க்கைக்கு ஒரு ஆதாரத்தை வழங்கினேன்.
 
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை ஆகியவற்றை பெற விரும்புபவர்கள் இடைத் தரகர்களை நம்பி ஏமாந்து போகின்றனர். இதற்காக நானே நேரடியாக களத்தில் இறங்கி உண்மையான பயனாளர்களை அறிந்து அவர்களுக்கு ஒரு பைசா செலவில்லாமல் பயன் கிடைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றேன். இதன் மூலம் கலெக்டர் தொடர்பு கிடைத்தது. நம்பிக்கை இல்லம் குறித்து என்னிடம் தெரிவித்தார். உடனடியாக அவரது எண்ணப்படி தற்போது இல்லம் செயல்பட்டு வருகிறது.
 
இந்த இல்லத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு தமிழ்வழி கல்வி, ஆங்கிலம், தற்காப்பு கலை, தமிழர் பண்பாட்டுக் கலைகள் கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இல்லத்திற்கு ஈகை உள்ளம் கொண்டவர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர், யாருன்னே தெரியாது, ஆஞ்சநேயர் கோவில் வந்தேன். நம்பிக்கை இல்லம் பற்றிக் கேள்விப்பட்டேன். எனக்கு பிறந்த நாள். ஒரு நல்ல காரியம் செய்வோமே என்று ஒருவர் 500ரூபாயைக் கொண்டுவந்து கொடுத்தார். உதவும் உள்ளங்கள் குழந்தைகளுக்கான துணிகள்,புத்தகங்கள் என உதவினால் நம்பிக்கை இல்லம் நம்பிக்கையோடு வளரும் என்று தெரிவித்தார். அவரைப் படமெடுக்க முயன்றபோது மறுத்துவிட்டார்.
 
விளம்பரம் எனக்கு விருப்பமில்லை; நீங்கள் இந்தச் செய்தியை எழுதுவதால் அந்தக் குழந்தைகளுக்கு ஒரு நல்ல உதவி கிடைக்கும் என்பதால் சொல்கிறேன். "பெற்றோர் இல்லை;உறவுகள் இல்லை என்ற எந்த ஏக்கமும் இல்லாத நிலை ஏற்பட வசதியுள்ளவர்கள் அவர்களின் தேவைக்கு உதவலாம்;வசதி இல்லாதவர் தங்கள் அன்பைக் கொடுத்து உதவலாம்".
 
நாம்,புரியாமல் மனோகரன் கந்தசாமியைப் பார்த்தபோது அதற்கு அவரே விளக்கமும் சொன்னார். பொதுவாக இதுபோன்ற "குழந்தைகள் பெற்றோர் மற்றும் சொந்தபந்தங்களின் அரவணைப்பு இல்லாததால், தங்கள் மீது அன்பைப் பொழியும் உள்ளங்களைத் தேடுவார்கள். பணமில்லாவிட்டாலும் மனமுள்ளவர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அந்தக் குழந்தைகளின் ஓய்வுப்பொழுதில் அவர்களின் நேரத்தைச் செலவிட்டு தங்கள் அன்பைக்கொடுக்கலாம். அந்தக் குழந்தைகளுக்கும் நம் மீது அன்பு காட்ட எவ்வள‌வு பேர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமல்லவா? அந்த சந்தோசம் அவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்பது அவர்களுக்காக பணம் காசைக் கொடுப்பவர்களைவிட தங்கள் அன்பை பகிர்ந்துகொடுப்பவர்களே அதிகம் தேவை" என்றார்.  ஆட்சியர் சகாயம் ஒரு நல்ல நபரைத்தான் நம்பிக்கை இல்லத்துக்கு தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்ற நம்பிக்கை நம் மனதிலும் துளிர் விட்டது.
 
இந்த இல்லத்திற்கு பல்வேறு உதவிகளை வழங்கிய நாமக்கல்லைச் சேர்ந்த பஸ் அதிபர் தயாளன் கூறும்பொழுது:- 

கலெக்டர் சகாயம் நாமக்கல் மாவட்டத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்.. அனைத்து அதிகாரிகளுக்கும் முன் மாதிரியான அவர் விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கு செய்யும் தொண்டு அளப்பரியது. எங்களது பாப்பு ரெட்டியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் ஆதரவற்ற பெண்களின் மத்தியில் அவர் பேசியது அந்த பெண்களின் தாழ்வு மனப்பான்மையை போக்கி அவர்களை இன்று செழுமைப்படுத்தி உள்ளது. தூய்மையான எண்ணம் கொண்ட அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றினை தொடங்கப்போவதாக நானும் எனது நண்பர் விஜயகுமாரும் கேள்விப்பட்டோம். உதவ சென்றபோது ரொக்கமாக பெற மறுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக நாங்கள் சமையல் கூடத்திற்கான பொருட்களை வழங்கினோம்.இன்னும் அந்த இல்லத்திற்காகவும் அந்த குழந்தைகளின் நலனிற்காகவும் பல்வேறு உதவிகளை வழங்க தயாராக எப்போதுமே உள்ளோம் எனத் தெரிவித்தார்.

 
நாமும் அந்த இல்லத்திற்கு சென்றோம்......
 
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் கலெக்டர் அலுவலகத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் பொரச‌பாளையம் உள்ளது. அமைதியான இந்த கிராமத்தில் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் தனியார் வீட்டின் காம்பவுண்டின் ஒரு சிறு பகுதியில் அமைந்துள்ளது நம்பிக்கை இல்லம். உள்ளே நுழைந்தோம் நாம்.... பள்ளி சீருடையில் இருந்த சிறுமி ஒருவர் நம்மை நோக்கி ஓடிவந்தார்.......
 
நேத்து நடந்த போட்டியில் அண்ணன் பென்சில் பாக்ஸ் பரிசா வாங்கியிருக்கான்...... என ஆசை பொங்க நம்மிடம் காட்டிய சிறுமி பாரதி(எ) சத்ய சூரிய பாரதி. நம்பிக்கை இல்லத்தின் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள்.
 
சார்... அருண் டீ டம்ளரை செவுத்துல அடிச்சுட்டான் சார்... என நம்மிடம் புகார் வாசித்த சிறுவன் மணிகண்டன் குழந்தையாக இருந்தபோது சரியான ஊட்டச்சத்து உணவு இல்லாததால் எலும்புகள் வலு இழந்து நடப்பதற்கே சிரமப்படும் இந்த சிறுவன் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றான்.
 
அங்கு நடப்பவை எதையும் கண்டு கொள்ளாமல் அறையின் ஒரு மூலையில் டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த விநாயகர் படத்தின் முன் கை கூப்பி சாமிக்கு சோறு பசிக்குது.. சோறு பசிக்குது என வேண்டி கொண்டிருந்தது அருண்குமார்..... சற்றே மனநிலையில் பாதிப்புள்ள இந்த சிறுவன் படிப்பது ஒன்றாம் வகுப்பு.....
 
இவர்களிலிருந்து சற்றே மாறுபட்டு அமைதியாக வழிநடத்தும் தலைவன் போன்று பக்குவத்துடன் நடந்து கொண்ட சிறுவன் நந்தா. 4 ம் வகுப்பு படித்து வருகின்றான்.
 
சார்..இந்த அருண்குமாரை வச்சிருக்கவே முடியல சார்... என புகாருடன் எதிர்பட்டவர்... செல்லம்மாள் குழந்தைகளை பராமரித்து வருபவர்...
இதில் மணிகண்டனும், அருண்குமாரும் மருத்துவர்களின் நேரடி சிகிச்சையில் இருந்து வருகின்றனர் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 
இவர்களை சந்தித்ததும் நமது மனதில்,"பெற்றோருடனும் உற்றோருடனும் வாழவேண்டிய வயதில் இயலாமல் ஆனாலும் தாயுள்ளத்தோடு நேசத்தையும் பாசத்தையும் பொழிகிற ஒரு கருணை இல்லம்...நம்பிக்கை இல்லமாக வடிவெடுத்திருப்பது இந்தப் பிஞ்சுகளுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே எழுந்தது. நம்பிக்கை இல்லத்தின் நிர்வாகியான மனோகரன் கந்தசாமி சொன்னது போல பணமோ பொருளோ கொடுக்கலாம்; இவை எதுவுமில்லாதவர்கள்  அதாவது, மனமுள்ளவர்கள் அன்பைக் கணக்கின்றிப் பொழியலாம்!"என்ற செய்தி நம் காதில் எதிரொலித்த வேளையில் "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! மற்றவர் உழைப்பைத்தாரீர்!! அதுவுமற்றோர் வாய்ச்சொல் அருளீர்!!! என்ற கவிஞனின் எண்ண அதிர்வுகள் நம்முள் அலையலையாய்க் கிளம்பியது.
 
நம்பிக்கை இல்லத்திற்கு நன்கொடை வழங்க
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கு எண்: 065201000022871
IFSC எண்: IOB A 0000652
இல்லத்தின் முகவரி
நம்பிக்கை இல்லம்
3/49, பொரசபாளையம்,
சிலுவம்பட்டி,
நாமக்கல் - 3

தொலைபேசி- 04286-221292
மின்னஞ்சல் முகவரி: nambikkaiillam@gmail.com

கட்டுரை மற்றும் படங்கள்
கே.எம்.வி.குமார்.




    Tags :    
நாமக்கல்லில் ஒரு நம்பிக்கையின் இல்லம்...........!, நாமக்கல்லில் ஒரு நம்பிக்கையின் இல்லம்...........!, நாமக்கல்லில் ஒரு நம்பிக்கையின் இல்லம்...........!,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in