tamilkurinji logo


 

ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர் - முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர்,
ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர் - முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர்

First Published : Friday , 1st January 2010 06:51:28 PM
Last Updated : Monday , 14th November 2011 03:02:53 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர் - முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர், இலங்கையில் தமிழர் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது. தமிழகம் ஓரணியில் திரண்டு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. சிங்கள இனவெறிப் பாசிசக் கொடுங்கோலாட்சி நடத்தும் மகிந்த அரசு உலகளாவிய மனித உரிமைகளைத் துணிந்து நசுக்குகிறது. தமிழர்களுக்குத் தமிழர்கள் என்ற உணர்வு வராத நிலையில்
உலகம் நம்மை எப்படித் திரும்பிப் பார்க்கும்?

அதிபர், முதன்மை அமைச்சர், எதிர்கட்சித் தலைவர், படையணிகள் தலைவர், காவலர், பொதுத் துறை, கல்வித் துறை என்று யாவற்றிலும் 85 விழுக்காட்டிலிருந்து 99 விழுக்காட்டினர் வரையில் சிங்கள பொளத்தர்கள். இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளில் 99 விழுக்காட்டினர் தமிழர்கள். கைது, கொலை, காணாமல் போதல், வல்லுறவு, குடிபெயர்வு போன்றவற்றிற்கு ஆளாவோரில் 99 விழுக்காட்டினர் தமிழர்கள்.

இந்த நிலை திடீரென்று தோன்றிவிடவில்லை.
 
1927லிலிருந்தே சிங்களர்களின் ஆதிக்க வெறிச் செயல் இலங்கைத் தமிழர் வாழ்வைச் சீரழித்து வருகிறது. 1927, 1971, 1977-82, 1985, 1986, 1989, 1994, 2003-2006 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அத்தனை பேச்சு வார்த்தைகளும் இலங்கை அரசுகளின் நேர்மையற்ற போக்குகளால் தோல்வியடைந்தன. 1956, 1965, 1987, 2002, 2005 ஆகிய ஆண்டுகளில் சிங்கள அரசு ஒப்பந்தங்களைத் தன்னிச்சையாக முறித்துக் கொண்டது.
இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் தமிழர்களாய்ப் பிறந்த ஒரே குற்றத்திற்காகக் கொல்லப்பட்டுள்ளனர். 28000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். 1,26,000 தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லூறு செய்யப்பட்டுள்ளனர். போரினால் எட்டு இலட்சம் தமிழர்கள் உலக நாடுகளுக்குக்  குடிபெயர்ந்து சிதறுண்டு போயினர்.
 
மேற்கு நாடுகளிலும் இந்தியாவிலும் ஆறு இலட்சம் தமிழர்கள் ஏதிலி முகாம்களில் உள்ளனர். எட்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய தமிழர்களின் சொத்துக்கள் சிங்கள வெறியர்களால் சூறையாடப்பட்டுள்ளன.

மூன்று இலட்சம் தமிழர் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 2375 தமிழ்க் கிறித்தவ, தமிழ் இந்து வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
ஓவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் பத்திரிகை ஆசிரியர்கள் கொல்லப்படுகின்றனர். உலகம் வெட்கித் தலைகுனியும் அத்துமீறல் அட்டூழியங்களை இலங்கை அரசு தட்டிக் கேட்க யாருமில்லை என்று துணிந்து செய்கிறது. அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் தடுத்து வரும் அனைத்து மீறல்களையும் அரசு என்று சொல்வதற்கான எந்தத் தகுதியும் இல்லாத சிங்களப் பாசிச அரசு செய்கிறது. போக்கிலிகளையும் வன்வெறியாளர்களையும் அரசே ஊக்குவிக்கிறது. இளஞ்சிறார்களும் முதியோர்களும் காயமடைந்து மருத்துவமனையில் நிரம்பி வழிகின்றனர். கொலையுண்ட மனித உடல்கள் புதைமேடுகளில் நிறைகின்றன.

2007ல் மட்டும் ஏழு பத்திரிகையாசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஊடகங்களைப் பொருத்தவரையில் இலங்கை முதன்மை ஆபத்தான நாடாக உள்ளது என்று அனைத்துலக ஊடக ஆய்வகம் கூறுகிறது. காணாமல் போவோர் அதிகரிக்கும் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. அனைத்துலக நாடுகள் அவை (அய்.நா.) அப்பட்டமான மனித உரிமை மீறல்களை ஆதரிக்கும் அரசு என்ற கூறித் தனது மனித உரிமை அமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்றியுள்ளது.

ஓற்றைச் சமயத்தைச் சார்ந்து ஏனைய சமயத்தவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றன. குறிப்பாக இந்துக்கள், கிறித்தவர்கள், இசுலாமியர்கள் போன்றோர் தங்களின் சமய நம்பிக்கைகளுக்காகத் துன்புறுத்தப்படுகின்றனர். இலங்கை ஒரு குட்டித் தீவாக இருந்தாலும் ஆசியாவிலேயே அரச பயங்கரவாதத்தால் அதிகம் குடிபெயரும் நாடாக உள்ளது.
தன்னார்வலர்கள், உதவும் உலக முகவர்கள், சமயத் தலைவர்கள் என்று யாவரும் நெருக்கடிக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர். சுதந்திரம் காப்போர் விருது (அமெரிக்கா) பெற்ற கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உயிரச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிற்குக் குடிபெயர்ந்துள்ளார். குடிமை உரிமைகளுக்காக ஒயாது குரல் எழுப்பி வந்த வழக்கறிஞர் நடராசா ரவிராசு, தியாகராசா மகேசுவரன், அருள்திரு. ஏம்.எக்சு. கருணா ரத்னம் போன்றோர் அரசினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது நான்காம் ஈழப்போர் நடைபெற்று வருகிறது. அமைதிக்கான முயற்சிகளை அரசே முறியடித்த நாடுகளில் இலங்கை 20ஆவது இடத்தில் உள்ளது. தமிழ் மக்களை விரட்டியடித்த இடங்களில் அமைதி தவழும் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. மக்களைக் கொன்று புதைக்கும் இடத்தில் புத்தருக்குச் சிலைகள்! நல்ல வேடிக்கை! பாவம் புத்தர். ஓரு வேளை புத்தர் திரும்ப வந்து போருக்கெதிராகக் குரல் எழுப்பினால் பெளத்த அரசு அவரைச் சுட்டுத் தள்ளத் தயங்காது. போரும் புத்தரும் ஒத்துப் போக முடியும் என்பதை இலங்கை அரசு எண்பித்துள்ளது.

சிங்களவெறிமயமாதலுக்காகத் தமிழின அழிப்பு தவிர்க்கவியலாதது என்று அரசு கருதுகிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தமிழ் ஊர்களுக்கு ஒரு நொடியில் சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. வடகிழக்குப் பகுதியில் நூற்றாண்டுகளாக வசித்து வரும் தமிழரும் இசுலாமியரும் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.

இலங்கை அரசு உதவியோடு, இனத் துரோகி கருணா மக்களைக் கொலை செய்து, கொள்ளையடித்து இங்கிலாந்துக்கு 53 கோடி ரூபாய்களைக் கடத்தும்போது அங்கு பிடிபட்டார். எனினும் இலங்கை அரசு அவரையே நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தது. போரின் முதல் களப் பலி உண்மை. அரசு தனது அத்தனை அதிகாரங்களையும் ஊடகங்களையும் பயன்படுத்திப் பொய்க் கருத்துப் பரப்பலில் ஈடுபட்டு வருகிறது.

தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்களர்கள் மகிழ்ச்சியடைவார்கள்; என்றார் செயவர்த்தனா.(பெப் 1978).
 
சிங்கள மரத்தின் ஒட்டுண்ணிக் கொடிகளே தமிழர்கள்,என்றார் விசயதுங்கா. (மே 1993).
 
சிறுபான்மைச் சமூகம் நாட்டின் பூர்வீகக் குடிகள் அல்ல ; என்றார் குமாரதுங்க (நவ 1994).
 
அடுத்தடுத்து பொறுப்புக்கு வந்த அதிபர்களின் பொறுப்பற்ற பேச்சினால் உலகின் மோசமான நாடுகளில் மோசமான நாடு என்று இலங்கை பெயரெடுத்துள்ளது.

1944ல். தமிழருக்குத் தன்னாட்சி உரிமையை வலியுறுத்திய இலங்கைக் கம்யூனிசுடு கட்சி, 1972ல், இலங்கையை ஒரு சிங்கள  பெளத்த நாடு என்று அறிவித்தது. 1956ல், சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, ஒரு மொழி இரு நாடுகள். இரு மொழிகள் ஒரு நாடு; என்று முழங்கிய கொல்வின் டி செல்வா, 1972ல்,  இலங்கையை ஒரே சிங்கள பெளத்த நாடாக்குவதற்காக, அரசியல் அமைப்புச் சட்டத்தையே  மாற்றியமைக்கக் காரணமானார். 1970களில், தமிழரின் தன்னாட்சி உரிமை அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறிய யமுன விமுக்தி பெரமுன 1986ல் தமிழ் விடுதலைப் போராட்டம் நசுக்கியெறியப்பட வேண்டிய ஒன்று என்றது. அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எதிராகத் தமிழர்களும் சிங்களர்களும் ஒன்றுபட்டு ஓரணியில் திரளவேண்டும் என்று வலியுறுத்திய செயதிலக தற்போது விடுதலைப் புலிகளை நசுக்க அமெரிக்க உதவியை நாடுவோம் என்கிறார்.

;தமிழரின் தன்னாட்சி உரிமையை மறுக்காமல் வழங்கும்போதுதான் இனச் சிக்கலைத் தீர்க்க முடியும் என்றும்தமிழரின் தன்னாட்சி உரிமையை ஏற்க மறுக்கும் எவருடனும்  பேசத் தேவையில்லை ;என்றும் முழங்கிய சந்திரிகா அதிபரானதும் தமிழர் மீது அமைதிக்கான போரைத்(!) துவக்கினார்.

அரசு எங்கள் குரலையும் கருத்துக்களையும் புறக்கணிக்கிறது. மக்களாட்சி நாடுகளில் சிறந்த ஒன்றாக மதிக்கப்பட்ட இலங்கை இன்று அவற்றின் எதிர்பார்ப்புகளைப் பொய்த்துப் போகச் செய்துள்ளது. எனவே, இனவெறிச் சிக்கலுக்குத் தீர்வு காணும் முயற்சியிலிருந்து விலகிக் கொள்கிறோம் என்று செருமன் விலகிக் கொண்டது.
குடியிருப்பு இல்லை. குடிநீர் இல்லை. கழிப்பிடங்கள் இல்லை. உணவு இல்லை. மருந்து இல்லை. நாங்கள் வீடிழந்து, தேசமிழந்து தேம்பி நிற்கிறோம். நாங்கள் போர் அகதிகள் என்கிறார் யாழ்ப்பாண ஆயர் சவுந்தர நாயகம். வன்னித் தமிழரைக் காப்பாற்றுங்கள் என்கிறார் வன்னி நீதி-அமைதிக் குழுவின் தலைவர் அருள்திரு. சேம்சு பத்திநாதன்.

கடந்த மார்ச் முதல் தமிழ் இதழியியலாளர் திசநாயகம் அவர்களை இலங்கை அரசு சிறைப்படுத்தியுள்ளது கருத்துக்களை வைத்திருப்பதற்காகவோ பரப்புவதற்காகவோ எவரும் தண்டிக்கப்படக் கூடாது. திபத்திய லாமாவோ, அர்சென்டைனா யூத குருவோ, சுவரொட்டி ஒட்டும் பாலத்தீனியரோ, இலத்தீன் அமெரிக்கக் குருவோ, துருக்கிய நாவலாசிரியரோ எவரும் தமது கருத்தைக் கூறியதற்காகத் தண்டிக்கப்படக் கூடாது  என்பதே மனிதநேயர்களின் உலகளாவிய கொள்கை.

மனித உரிமைகளின் மீது அக்கறை காட்ட வேண்டிய அரசு மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து தனது உள்நாட்டு மக்கள் விரோத அட்டூழியங்களையும் அரச பயங்கரவாதத்தையும் மூடிமறைக்க முயலுகிறது. உலகம் காட்டும் அமைதியைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு தமிழரைப் பூண்டோடு கருவருக்கத் துடிக்கிறது. தமிழர்கள் தமிழர்களாய் விழித்தெழுந்து போராடினால்தான் தமிழினத்தைக் காப்பாற்ற முடியும். ஆனால் என்ன நடக்கிறது?

தூக்கத்திலிருந்து விழித்தெழ மறுத்து அடம்பிடித்தது அனைத்துலக மனசாட்சி. ஈழத்தின் கடைசி நம்பிக்கைகளும் கருகின. மக்களாட்சி, மாந்த உரிமை, இறையாண்மை, கூட்டாட்சி என்றெல்லாம் குரல்கள் வலுக்கும் இன்றைய நூற்றாண்டில் நம் அனைவரின் கண்களுக்கு முன்பாகவும் ஒரு இனப்படுகொலை எளிதாக நிறைவேறியுள்ளது. கடந்த அய்ந்து மாதங்களில் ஒரு இலட்சம் மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்றரை இலட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர். ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர். இரவு என்ற தனது படைப்பிற்காக நோபல் பரிசு பெற்ற எலி வீசல் எழுதுகிறார்: “என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, அமைதியான நீலவானத்தின் கீழ் புகைவளையங்களாக மாறிய அக் குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது. என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அந்தச் சுவாலைகளை வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, முதலும் முடிவும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்? எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல நான் வாழ விதிக்கப்பட்டாலும்  அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!”. ஈழத் தமிழர்கள் தங்களுக்கு நடந்ததை மட்டுமல்ல, தமிழகத் தமிழர்கள் செய்யத் தவறியதையும் மறக்கமாட்டார்கள். மன்னிக்கமாட்டார்கள். தமிழர் குரல் பலவீனப்பட்டுள்ளது. மோசமடைந்து வரும் தமிழக அரசியலை வைத்துக் கொண்டு நாம் நல்லது எதுவும் செய்ய முடியாது.

 ‘இலங்கை முகாம்களில் வாழும் இடம் பெயர்ந்த தமிழர்களின் துன்பங்களை வார்த்தைகளால் விளக்க முடியாது. இலங்கை நாட்டு சட்டதிட்டப்படி தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு வெளிப்படையாக பேசுவதால் நான் தண்டிக்கப்படலாம்’ என்று அந்நாட்டுத் தலைமை நீதிபதி கூறுகிறார். அவர்களாலேயே சகித்துக் கொள்ள முடியாத ஒன்றைத் தமிழ்மக்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் இப்படி உண்மைகளை உரத்துப் பேசுகிற மனிதர்கள் அரிதாகவே இருக்கின்றனர். உண்மையை விடப் பொய்மைக்கும் போலிக்கும் வதந்திகளுக்கும் தமிழகம் நிறையவே இடம் கொடுத்து சீரழிவுற்றுள்ளது.

 ‘சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள அமைதி காக்கிறது இந்திய ஏகாதிபத்தியம் என்று சாடினான் தன்னுயிர் ஈந்து தமிழ்மானம் காத்த வீர இளைஞன் முத்துக்குமார்.
 
அந்தக் கள்ள அமைதியையும் கலைத்து விட்டு இந்தியா ஒரு அப்பட்டமான போர்வெறி நாடு என்பதையும் உலகிற்கு அறிவித்து விட்டது. இந்திய ஆட்சியாளர்கள் உலகினர் முன் அரசியல் அம்மணத்தோடு நிற்பதற்காக வெட்கப்படவில்லை. இப்படி ஒரு கேடு கெட்ட, வஞ்சகமான, தமிழர் விரோத இந்தியாவில் நாம் வாழ்வதற்காக நமக்குத்தான் வெட்கமும் வேதனையும் நெஞ்சைக் குமைகின்றன. இந்திய அரசும் வெளியுறவுத் துறையும் ஊடக ஊத்தைகளும் மீண்டும் அம்பலப்பட்டிருக்கின்றன. இந்த ஈனர்களையும் உலகமகா எத்தர்களையும் தாங்கிப் பிடிக்கும் தமிழக அரசியல்வாதிகள் தமிழர் அனைவருக்கும் பிணக்குழி தயாரிக்கின்றனர். இவர்களை அரசியல் பயங்கரவாதிகள் என்பதில் தவறில்லை.
 
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப்...
 
இந்தியாவைப் போன்றே கள்ள அமைதியில் காலந்தள்ளும் அய்.நாவும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் போலோபியான் இனப்படுகொலை நாடான இலங்கையின் பக்கம் ஈனத்தனமாய் நிற்கும் அய்.நாவை லீமாண்ட் என்ற பிரெஞ்சு நாளேட்டில் தோலுரித்துக் காட்டியுள்ளார். இட்லரோடு இணைந்து நின்ற குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட நூரம்பர்க் விசாரணை வதை முகாம்களின் மறைவில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை அதிரடியாக வெளிக்கொணர்ந்தது. அனைத்துலக மனித உரிமை அறிவிக்கை அப்பொழுதுதான் உருவானது. அதே அய்.நா.வே இன்று குற்றவாளியானதற்குக் காரணம் அதன் துணைப் பொதுச் செயலாளர் விசய் நம்பியார் என்று பிலிப் குற்றம் சாட்டுகிறார்.
 
போரிலிருந்து மக்களைக் காப்பாற்ற உருவான அய்.நா. கையைக் கட்டி வேடிக்கை பார்த்தது  என்றால் உயிரற்ற இந்த அமைப்பு இனியும் தேவையா?  
 போலந்தில் பிறந்த யூதரான ரபேல் லெம்கின் இட்லரின் நாசிப்படை அட்டூழியங்களை எதிர்த்து இனப்படுகொலை என்பதற்கான ஆங்கிலச் சொல்லை முதன்முதலாக உருவாக்கினார். லெம்கினின் முயற்சியால்தான் டிச 9, 1948ல் அய்.நா. இனப்படுகொலைக் குற்றத் தடுப்பும் தண்டனையும் குறித்த உடன்படிக்கையை உண்டாக்கியது. இனப்படுகொலை ஒரு அனைத்துலகக் குற்றச்செயல் என்பதும் கையெழுத்திட்டுள்ள நாடுகள் இனக்கொலையாளிகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.
 
164ஆவது இடத்தில்....
 
மனித உரிமைகளைப் பேணுவதில் 192 நாடுகளில் 164ஆவது இடத்தில் இருக்கிறது இலங்கை. ஊடகவியலாளர்களுக்கு உயிரச்சுறுத்தலை உண்டாக்கும் நாடுகளில் முதலிடத்தில் ஈராக்கும் இரண்டாவது இடத்தில் இலங்கையும் உள்ளன. இந்த இலங்கைதான் மனித உரிமை அமைப்பின் வாக்கெடுப்பில் இந்தியாவின் ஆசியோடு வெற்றி பெற்றிருக்கிறது. 2008 மே மாதம் இலங்கையை உறுப்பு நாடாக்க இந்தியா படாதபாடுபட்டது. இலங்கையை அந்தத் தேர்தலில் தோல்வியடைய வைத்து இந்திய-இலங்கை சர்வாதிகாரிகளின் முகம்களில் கரி அப்பியவர்கள் நோபல் பரிசு பெற்ற மூவரான, தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினப் பேராயர் டெசுமாண்ட் டூடூ, முன்னால் அமெரிக்க அதிபர் சிம்மி கார்டர், அர்சென்டைனாவின் மனித உரிமைப் போராளி அடால்ப் பரேசு எசுகியூவல் ஆகியோரும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைப் போராட்ட அமைப்புகளும். சொந்த மக்களையே கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கும் இலங்கைக்கு மனித உரிமைகளைக் காப்பதற்கான ஓர் அமைப்பில் இடம் பெறும் தகுதி கொஞ்சமும் இல்லை என்றார் டூடூ. 70களில், 80களில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்த சித்திரவதை, ஆள்கடத்தல், படுகொலைகள் அச்சு அசலாக இலங்கையில் நடப்பதாகக் குற்றஞ்சாட்டினார் எசுகியூவல். உலகின் படுகேவலமான நாடான இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் படைஉதவி, பணஉதவி, போர் உத்தி, தொழில்நுட்ப உதவி வழங்கும் நாடுகளாக இந்தியா, இரசியா, சீனா, பாகிசுதான், ஈரான், லிபியா, சவுதி அரேபியா, அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் உள்ளன. பயங்கரவாதத்தை வென்றதாக மனித உரிமைக் குழுவின் சிறப்பு அமர்வில் இலங்கை கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா, சீனா, கியூபா, பாகிசுதான், இந்தோனேசியா, மலேசியா, சவுதி அரேபியா, பக்ரைன், பிலிப்பைன்சு ஆகிய நாடுகள் ஆதரித்துள்ளன. உண்மைக்கும் மனித உரிமைக்கும் மரணக்குழி பறிக்கும் உலக நாடுகள் இருப்பதால்தான் இலங்கை இனப்படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் துணிந்து செய்கிறது.

ருவாண்டாவிலும் போசுனியாவிலும் நடந்தது இலங்கையிலும் தொடர்கிறது. இலங்கை அரசு தொடர்ந்து தனது இனவெறுப்பை உமிழ்ந்து வருகிறது. 1956, 1958, 1961, 1974, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அரசே முன்னின்று நடத்திய இனக் கொடுமைகளை உள்ளூர்  மற்றும் உலக ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. இலங்கையின் முந்தைய வரலாற்றை ஆய்வு செய்தால், 1505ல் போர்த்துகீசியர்கள் இத் தீவைக் கைப்பற்றிய போது மூன்று அரசுகள் தனித்தனியே இருந்து வந்துள்ளன. வடகிழக்கில் தமிழ் அரசும் தென்மேற்கில் சிங்கள அரசுகளும் இருந்துள்ளன. 1658லிருந்து 1796 வரை டச்சுக்காரர்கள் ஆண்டுள்ளனர். இவ்விருவரின் நோக்கமும் வணிகமும் தீவைக் கொள்ளையிடலும்தான்.
 
இனவெறி விதைத்தவர்....
 
1796லிருந்து 1948வரையில் ஆங்கிலேயர்கள் ஆண்டுள்ளனர். மூன்றையும் ஒன்றாக்கிய ஆங்கிலேயர்கள் நிரந்தர இனமோதலுக்கும் பண்பாட்டுப் பதட்டத்திற்கும் வழிவகுத்தனர். 1948ல் சுதந்திரமடைந்த இலங்கையின் முதல் பிரதமர் சேனநாயகா தமிழர்களையும் மார்க்சியர்களையும் ஒடுக்குவதற்காக பத்து இலட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்கள் என்று அறிவித்தார். இவர்கள் ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டிலிருந்து தேயிலைத் தோட்டங்களை உண்டாக்கக் கொண்டு செல்லப்பட்டவர்கள். சுதந்திரம் பெற்றதும் சிங்களர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கான கொடும் அடையாளமாக அந்த அறிவிப்பு அமைந்தது. பாராளுமன்றத்தில் தமிழர்களின் பலத்தைக் குறைப்பதற்காக தமிழர்கள் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் அன்று தொடங்கி இன்றுவரை தொடர்கின்றன.
 
1952ல் சேனநாயகாவின் இறப்பிற்குப் பின் அவரின் மகன் டட்லி சேனநாயகா பதவிக்கு வந்தார். அரிசி விலையில் கைவைத்ததால் நாடெங்கிலும் உண்டான கிளர்;ச்சியைத் தொடர்ந்து அவர் பதவி இறங்கினார். இவரின் மாமா சான் கொத்தலவாலா அடுத்து பதவியேற்றார். 1956ல் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின் பண்டாரநாயகா பதவிக்கு வந்தார். சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று இவர் கொண்டு வந்த சட்டம் சிங்கள-தமிழ் இனங்களிடையே பெரும் கொந்தளிப்பையும் இனமோதலையும் உருவாக்கியது. 25000 தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகக் குடிபெயர்ந்தனர். தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி புழங்குவதற்கான பண்டா-செல்வா ஒப்பந்தத்தையும் பௌத்த மதகுருக்களைத் திருப்திப்படுத்த பிறகு இவரே கிழித்தெறிந்தார். ஆனாலும் 1959ல் ஒரு புத்த பிட்சுவால்  கொல்லப்பட்டார். இனவெறி விதைத்தவர் இனவெறிக்கே பலியானார்.

அடுத்து அவர் மனைவி சிறீமாவோ பதவியேற்றார். கணவனின் கொலையிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. 1965 தேர்தலில் டட்லியிடம் தோற்றார். 1970ல் மறுபடியும் ஆட்சிக்கு வந்த சிறீமாவோ, 1972ல் தமிழர்கள் பங்கேற்காமல் ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உண்டாக்கினார். சிலோன் சிறீலங்கா என்று பெயர் மாற்றப்பட்டது. சோசலிசக் குடியரசு நாடு என்று பெயர் வைத்துக் கொண்டே பௌத்தத்தை அரச மதமாக்கினார். தரப்படுத்துதல் என்ற பெயரில் சிங்கள மாணவர்களைவிட தமிழ் மாணவர்கள் முப்பது விழுக்காடு அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். தமிழகத் தலைவர்கள் பொங்கி எழுந்து போராடிய போதெல்லாம், 1956, 1958, 1961 ஆகிய ஆண்டுகளில் அரசே தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தியது.
 
 1974ல் யாழ்ப்பாணத்தில் அகில உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெற்ற போதும் சிங்களக் காவலர்கள் உள்ளே வந்து மோதலை உருவாக்கினர். காலில் மிதிபட்டு ஒன்பது பேர் செத்தார்கள். 1977ல் சூனியச் ரிச்சர்டு செயவர்த்தனே பிரதமரானார். 1976ல் தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் விடுதலை முன்னணியை உருவாக்கினர். 1979ல் யாழ் பகுதியில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டது. 1981ல் யாழ் தீப்பற்றியெரிந்தது. யாழ் சந்தை,  பாராளுமன்ற உறுப்பினர் யோகேசுவரனின் யாழ் வீடு, தமிழ் நாளேடு அலுவலகம், விலைமதிப்பற்ற யாழ் நூலகம் யாவும் எரிந்து சாம்பலாயின. 1976ல் தமிழ் விடுதலைக் கட்சி சுதந்திரத் தமிழ் ஈழம் மலரத் தங்களுக்கு வாக்களிக்கும்படி வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்மொழிந்தது. முப்பதாண்டு காலமாக அமைதி வழியில் போராடிப் பார்த்தாயிற்று. இனி சுதந்திரத் தமிழ் ஈழம் தவிர மாற்று வழியில்லை என்ற முடிவிற்கு வந்தது. 1977 தேர்தலில் 82 விழுக்காடு மக்கள் இக் கட்சிக்கு வாக்களித்தனர். முதல் முறையாகத் தமிழ்க் கட்சி இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியானது. ஆனால் எப்பொழுதெல்லாம் பாராளுமன்றத்தில் தமிழர் தன்னாட்சி என்றும் தமிழ் ஈழம் என்றும் இவர்கள் பேசினார்களோ அப்பொழுதெல்லாம் அடக்குமுறையை அரசு கையாண்டது.
 
தமிழ்ப் போராளிகளைத் தமிழ் மக்கள் ஆதரித்தாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலையை சிங்கள அரசு ஏற்படுத்தியது. சூலை 1983ல் மிகக் கொடிய இனப் படுகொலையை செயவர்த்தனே கட்டவிழ்த்தார். யாழ்ப்பாணத்தில் 13 இலங்கை இராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் கொன்றதைத் தொடர்ந்து கொழும்புவில் 3000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் சித்திரவதைக்கும் இழிவுக்கும் ஆளானார்கள். சிங்களரைத் திருப்திப்படுத்துவதற்காகத் தமிழர்களைப் பூண்டோடு அழித்தொழிப்பதைத் தவிர தனது அரசுக்கு வேறு வழியில்லை என்று செயவர்த்தனே பொதுக்கூட்டங்களிலேயே சிங்கள வெறியூட்டி, இனஒழிப்பு நஞ்சைக் கக்கினார்.
 
குரல்வளை நெறிக்கப்படுகிறது....
 
யூகோசுலாவியா, ருவாண்டா இனப்படுகொலைகளை விசாரித்த அய்.நா. 1956லிருந்து திட்டமிட்டு படுகொலை செய்யப்படும் தமிழர் அவலம் குறித்து கண்டு கொள்ளவில்லை. 1983ல் தொடங்கி ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 98மூ மக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள். கடந்த மூன்றாண்டுகளில் கொல்லப்பட்ட பதினோரு பத்திரிகையாசிரியர்களில் எழுவர் தமிழர்கள். அய்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 20000 தமிழ்ப் பெண்கள் கைம்பெண்களாயினர். ஏண்ணற்றோர் பாலியல் வன்புணர்விற்கும் கொடிய சித்திரவதைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். இவ்வளவும் அவர்களின் குடும்பத்தார் முன்னிலையிலேயே நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கான தமிழர் உடல்கள் அடையாளம் காணப்படாத கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளைப் பிரிந்த பெற்றோர்கள் முள்கம்பி வேலிகளுக்குப் பின்னால் பரிதவிக்கின்றனர். இந்துக்கள் மற்றும் கிறித்தவர்களின் மதகுருக்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான இந்துக் கோயில்களும் கிறித்தவக் கோயில்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சிங்களக் குடியேற்றங்கள் புதிதாக முளைக்கின்றன. தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்களத்திற்கு மாற்றப்படுகின்றன.

இட்லர் யூதர்களைக் கொன்றொழித்த போது உலகம் விழித்தெழுந்து பாசிசத்திற்கெதிராகப் போராடியது. பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா நாசிகளை எதிர்த்துப் போராடின. பலரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க உதவி செய்தன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இனவெறி சிங்கள பௌத்த தலைவர்களிடம் சிக்குண்டு உயிரும் உடைமையும் இழக்கும் தமிழர்களின் துயர் துடைக்க அகிலம் ஆதரவுக்கை கொடுக்கவில்லை. இலங்கை அரச பயங்கரவாதத்திற்கெதிராகத் தனது சுட்டு விரலையும் அசைக்கவில்லை. தமிழர்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது வன்முறையல்ல. அது சுதந்திரத்திற்கான போராட்டம். பிரான்சும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தமிழர் மீதான போரை நிறுத்தச் சொல்லி வேண்டின. பேச்சுவார்த்தைகளும் நடத்தின.  இங்கிலாந்து, பிரான்சு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கொழும்பு சென்று வெறுங் கையோடு திரும்பி வந்தனர். மருத்துவமனைகள், பள்ளிகள், அனாதை இல்லங்கள், முதியோர் காப்பகங்கள் போன்றவற்றை அழித்தும் வயல்களைச் சூறையாடியும் எண்ணற்ற பச்சிளம் குழந்தைகளின் மீது குண்டு வீசியும் வருகின்ற இனவெறியர்களிடம் எதைப் புரியவைத்துவிட முடியும்?

ஏப்பொழுது வேண்டுமானாலும் கடத்தப்படுவோம், கொலை செய்யப்படுவோம், பாலியல் வன்புணர்விற்கு ஆளோவோம் என்ற நிலையில் தமிழ் மக்கள் காலந்தள்ளுகின்றனர். பெரும்பான்மை இனவெறியர் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலையில் தமிழர்களின் எதிர்காலமும் நிகழ்காலம் போன்றே இருண்டு போயுள்ளது. அய்.நாவின் மனித உரிமை ஆணையர் லூயிசே ஆர்பரின் அறிக்கையும் அதையே சுட்டுகிறது. வுன்னி மக்கள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்திலும் கொழும்புவிலும் கூடத் தமிழரின் நி;ம்மதி பறிக்கப்பட்டுள்ளது. நேசனல் போச்டு பத்திரிகையில் சுடுவர்டு பெல் யாழ்ப்பாணத்தில் சுதந்திரம் இல்லை. நகரம் திறந்தவெளிச் சிறைச்சாலையாக உள்ளது. அச்சமும் இரத்தம் சிந்துதலுமே ஆள்கின்றன. மீன்பிடிக்கத் தடை. வயல்வெளிகள் பகுதி யாவும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளது. தரப்படுத்துதலால் மாணவர்கள் படிக்க முடியவில்லை என்று எழுதுகிறார். கொழும்புவிலும் தமிழர்கள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர். சுதந்திரத்தின் போது இங்கிலாந்து தமிழர்களுக்கெதிராக மிகப் பெரும் தவறிழைத்துவிட்டது. சிறுபான்மையினத்தவரைப் பாதுகாக்கும் சட்டங்களை அப்போதே கொண்டு வரவில்லையே என்று வருந்துகிறார் அய்வோர் சென்னிங்சு. கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்.

நாட்டாட்சி கொடுங்கோலாட்சியாகும் போது அதைக் காட்டாட்சி என்று கூறுவோம். ஆனால் கிளிநொச்சியில் காட்டுக்குள் நடந்த ஆட்சி நாட்டாட்சியை நாண வைக்கும். அந்த அளவிற்கு அனைத்தும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் திறமையாகவும் நடைபெற்று வந்தன. அங்கு சென்று திரும்பிய வெளிநாட்டு அதிகாரிகளும் பத்திரிகையாசிரியர்களும் புகழாரம் சூட்டுகின்றனர். இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சன26, 2009ல் குறிப்பிடுகிறார்: “புலிகளை நாங்கள் வென்று விட்டோம். முடிந்துவிட்டது. விடுதலைப் புலிகளின்கதை என்றார்.
 
தமிழ் ஈழத்தில் தரைப்படை, கப்பற்படை, வானூர்திப்படை (அனைவரும் சீருடைகளுடன்) இருந்தன. சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் அவர்களின் சொந்த காவல் துறை, நீதிமன்றங்கள், வரி வசூலிப்பு நிலவின” என்கிறார். தனது அகிம்சை முறைப் போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப் போனதைக் கண்ட ஈழத்துக் காந்தி எனப்படும் தந்தை செல்வநாயகம் கடைசியில் வான் நோக்கிக் கண்களை உயர்த்தி ‘கடவுளே, தமிழர்களைக் காப்பாற்று என்று கூறிவிட்டுத் தன் கடைசி மூச்சை விட்டார். உண்மையில், தமிழர்கள் பிரபாகனைப் பின்பற்றவில்லை. பிரபாகரன்தான் தமிழர்களைப் பின்பற்றுகிறார். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறார். 70களில் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழ்ஈழத்தை முன்மொழிந்தவரே மலையகத் தலைவர் தொண்டைமான்தான். 1983 கறுப்பு சாலை  கலவரங்களுக்குப் பிறகு ஈழ வரலாற்றில் தவிர்க்க முடியாத நாயகனானார் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
 
சிங்கள அரசுகளுக்குப் புரியும் மொழியில் இவர்தான் பேசுகிறார். வவுனியாவில் சரணடைந்த ஒரு தமிழ்ப் பெண்ணை எந்த அளவிற்கு இராணுவத்தினர் நாசப்படுத்தியுள்ளனர் என்றால் ஒரு லிட்டருக்கும் மேல் விந்து இருந்துள்ளது. அய்.நா.வின் படையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காளாகி வெளியேற்றப்பட்டதையும் இங்கு நினைவு கூறலாம்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ள பேரா. வி.சூரியநாராயணன் நமது கைகள் இரத்தத்தில் தோய்ந்துள்ளன என்கிறார். இந்தியா தலையிடும் என்கிற அச்சம் இப்போது இலங்கைக்கு இல்லை. இது இந்தியாவின் இராசதந்திரத்திற்குத் தோல்வி. இதன் விளைவாகத்தான் அய்நா மனித உரிமை அமைப்பில் சீனாவோடும் பாகிசுதானோடும் கைகோர்த்துக் கொண்டோம். புதுதில்லியின் வாக்களிக்கும் நடத்தை ஒரு இந்தியன் என்ற வகையில் என்னை அவமானப்படுத்துகிறது. வாக்களிப்பதிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என்கிறார்.
 
இந்தியா இலங்கையில் என்னதான் செய்கிறது என்பது பாராளுமன்றத்திற்குக் கூடத் தெரியாமல் ஒளித்து மறைத்து செய்யப்படுவதற்குக் காரணம் ஒரு சில பாராளுமன்றத்திற்கு அப்பால்பட்ட சனநாயக விரோத சக்திகள்தான். கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் கொடிய குண்டு வீச்சை சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்திய ராசபக்சேக்கு மட்டுமல்ல அவரின் கைகளை வலுப்படுத்தியவர்களுக்கும் சாவு மணி அடிக்கப்படும் என்கிறார். 500 கோடியை எந்த நிபந்தனையும் விதிக்காமல் இலங்கைக்குக் கொடுப்பதற்காக எம்.கே.நாராயணனையும் சிவசங்கர் மேனனையும் சாடுகிறார். பணத்தைக் கையாள இலங்கை அரசு உருவாக்கியுள்ள 20 நபர் குழுவில் 19 பேர் சிங்களர்கள், ஒருவர் இசுலாமியர். ஒருவர்கூடத் தமிழர் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
 
இந்தியாவின் போர்....

உலக நோக்கர்கள் மனித உரிமை அமைப்பில் இலங்கைக்காக வாக்கு சேகரித்தது இந்தியாதான் என்று குற்றம் சுமத்தியுள்ளனர். த வீக் இதழுக்கு அளித்த பேட்டியில் ராசபக்சே, தான் நடத்தியது இந்தியாவின் போர் என்றே கூறியுள்ளார். அகில உலகச் சட்டங்கள் குறித்த நிபுணத்துவம் உடைய அமெரிக்க வல்லுனர் பிரான்சிசு பொய்லே இலங்கையில. தமிழர்கள் தனிநாடு கேட்பதை இந்தியா எதிர்க்கக்கூடாது என்கிறார். அங்குள்ள தமிழர்கள் கேட்பதாலேயே இந்தியத் தமிழர்களும் தனிநாடு கேட்பார்கள் என்பது தவறான ஊகம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது இலங்கை தெற்காசியாவின் மிகச் சிறந்த முன்னேற்றத்திற்கான முன்மாதிரி நாடாகத் திகழ்ந்தது. 50களில் சிங்கப்பூர் உருவாக்கப்பட்டபோது அதன் புதிய தலைவர் லீ சிங்கப்பூரை இலங்கையைப் போன்று உருவாக்குவதே என் நோக்கம் என்றார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் முன்மாதிரியாகிவிட்டது. இலங்கையோ ருவாண்டா ஆகிவிட்டது. அதிகம் கல்வியறிவுடையோர் வாழ்ந்து, மக்களாட்சியும் பன்முகத்தன்மைகளும் கோலோச்சிய ஒரு நாடு இன்று இனப்படுகொலை நாடாகச் சீரழிவுற்றது. பெரும்பான்மை சிங்களவெறியைக் கொன்று புதைத்திருந்தால் இலங்கை உலகின் முதன்மை நாடாக விளங்கியிருக்கும்.
 
உலகின் மிகச் சிறந்த, முன்னெடுத்துக்காட்டான ஒரு தேசத்தை காடுகளுக்குள் ஒளிந்து கொண்டே ஒரு சில போராளிகளால் உருவாக்க முடிகிறதென்றால் அவர்கள் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தால் அந்த நாட்டின் முன்னேற்றத்தை வேறெந்த நாடும் அடைந்திருக்க முடியுமா? அமைதி தவழும் தேசத்திற்கு அவர்கள் முன்கை கொடுத்திருக்க மாட்டார்களா? இனவெறியிலும் மொழிவெறியிலும் இந்தியா எப்படி அழுக்கடைந்து அசிங்கமாகவும் அருவெருப்பாகவும் இருக்கிறதோ அதைப் போன்றே இலங்கையும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.
 
ஆசுதிரேலியா நிறவெறியைக் கைவிட வேண்டும் என்று சொல்கிற தகுதி இன்னொரு நாட்டு இனவெறிக்கு ஆயுதத் தீனி போட்டு இழிந்த ஆலோசனை சொல்லும் இந்தியாவிற்கு இல்லை. காசுமீரிலும் வடகிழக்கிலும் மக்களின் அத்தனை அடையாளங்களையும் வாழுரிமையையும் அடித்து நொறுக்கும் இந்தியா தெற்காசியாவின் பேட்டை ரவுடி என்று பெயர் எடுத்துள்ளது பொருத்தமானதுதான். உலகிடமிருந்து பாடம் கற்க வேண்டியது இலங்கை மட்டுமல்ல. இந்தியாவும்தான். ஆயுதம் களைந்து போர்களற்ற அன்பான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும் என்பதை புத்தர், அசோகர், காந்தி வழியில் நின்று உலகினருக்கு உணர்த்தத் தவறிய இந்தியாவிற்கு இனி என்ன எதிர்காலம் இருக்க முடியும்?
 
உலகம் உருண்டை. எங்கு சென்றாலும் தொடங்கிய இடத்திற்கு வந்தாக வேண்டும். எதிரிகளையும் எதிரி நாடுகளையும் போதிய அளவிற்கு உருவாக்க முடியாமல் போகும் போது சொந்த மக்களின் மீதே போர் தொடுக்க வேண்டியிருக்கும். பிறரை எதிரியாக்கிக் கொள்பவன் ஒரு கட்டத்தில் தன்னைத்தான் எதிரியாகச் சந்திக்க வேண்டியிருக்கும். பௌத்தம் வீழ்ச்சியுற்றதால் இந்தியா கெட்டது. பௌத்தம் எழுச்சி பெற்றதால் இலங்கை கெட்டது. தவறு பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தை தவறாகப் பயன்படுத்துவோரிடம் உள்ளது. அமைதியின் இலக்கணமான பௌத்தம் போரின் இலக்கணமாக எப்படி மாறியது? நாம் எவ்வளவுதான் மிகச் சிறந்த கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் தலைமையிலிருப்போர் மோசமானவர்களாக இருந்தால் எவராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது. நவகாலனியத் திருடர்கள் மற்றும் முகவர்களின் பிடியிலிருந்து நம்மையே நாம் விடுவித்துக் கொள்ள முடியாவிட்டால் இனியொரு நூற்றாண்டு நமக்கில்லை. சனநாயகத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் பொதுமைக்காகவும் தமிழினம் உலக விடுதலைப் போராளிகளோடும் மனித உரிமை அமைப்புகளோடும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாயம். மிகப் பெரும் நெருக்கடியில் நாம் சிக்குண்டு கிடக்கிறோம். சனநாயகப் போர்வையில் ஒளிந்து கிடக்கிற சர்வாதிகாரிகளின் கொடுங்கோலாட்சியிலிருந்து விடுதலை பெறுவது ஒரு நீண்ட நெடிய போராட்டம். எவ்வளவு விரைந்து அதைத் தொடங்குகிறோமோ அவ்வளவு விரைந்து விடியலின் காற்று நம் இனமெங்கும் வீசும்.

முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர்,
மக்கள் தொடர்பியல் மையம், வளனார் வளாகம்,
திண்டுக்கல்.624001. பேசி: 9442634209    Tags :    
ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர் - முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர், ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர் - முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர், ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர் - முனைவர்.அருள்திரு.பிலிப் சுதாகர்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பணிவோம், உயர்வோம்!
பிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்

மேலும்...

 மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு

மேலும்...

 திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்
 எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள்? இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக

மேலும்...

 முதுமை பற்றிய பொன் மொழிகள்
மூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in